Saturday, July 28, 2012

6. (ஏ)மாற்றம்

பல வருடங்கள் கழித்து எங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்குச் சென்றேன். என் அப்பா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது என் அம்மாவின் விருப்பப்படி, என் அப்பா பிழைத்தெழுந்தால் குலதெய்வத்தின் கோவிலுக்கு வந்து அங்கப் பிரதட்சிணம் செய்வதாக வேண்டிக் கொண்டிருந்தேன்.

 குலதெய்வம் என் அப்பாவைப் பிழைக்க வைக்கவில்லை. அதனால் நானும் என் வேண்டுதலை இதுவரை நிறைவேற்றவில்லை. 

ஆனால் என் அம்மா மட்டும் அடிக்கடி 'ஒரு தடவை குலதெய்வம் கோவிலுக்குப் போய் அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டு வா. குடும்பத்துக்கு நல்லது' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். பிறகு ஒருநாள் அவர்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

பத்து வருடங்கள் கழித்துப் பிரார்த்தனையைப் பெற்றுக்கொள்ள என் குலதெய்வம் முடிவு செய்து விட்டது போலும்! குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்ததும், "ஒரு தடவை குலதெய்வம் கோவிலுக்குப் போய் அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டு வாருங்கள். குடும்பத்துக்கு நல்லது" என்றாள் என் மனைவி. அன்று என் அம்மா சொன்ன அதே வார்த்தைகள்! தாய் சொல்லைத் தட்டலாம். தாரம் சொன்ன சொல்லைத் தட்ட முடியுமா? அதுதான் கிளம்பி வந்து விட்டேன்.

அதிகாலையிலேயே அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும் என்பதால் முதல்நாள் இரவே அந்த ஊருக்கு வந்து விட்டேன். கோவில் இருந்தது ஒரு சிற்றூரில் என்றாலும் ஓரளவு புகழ் பெற்ற கோவில் என்பதால் கோவிலில் எப்போதும் கூட்டம் இருக்கும். (பக்த கோடிகள் கூடப் புகழ் பெற்ற கடவுளைத்தானே நாடுகிறார்கள்!) எனவே ஊரில் சில தங்கும் விடுதிகள் உண்டு. ஊரில் வசிப்பவர்கள் சிலரும் வெளியூர் பக்தர்களுக்குத் தங்கள் வீடுகளில் தங்க இடமளித்து உணவளிப்பதும் உண்டு. இதில் அவர்களுக்குச் சிறிதளவு வருமானமும் கிடைக்கும்.

ஊருக்கு நான் வந்து சேர்ந்தபோது பொழுது சாய்ந்து விட்டது. கோவில் வாசல் அருகே நின்று திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் அணுகித் தன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என்ற ஆழ்வாரின் வாக்குக்கு இசைவாக இருந்த அந்தக் குடிலில் நுழைந்து, குளித்து உடை மாற்றிக்கொண்டு, (அந்த) இல்லத்தரசி அன்புடன் அளித்த நீர்த்த ஆனால் மணத்துடன் இருந்த காப்பியைப் பருகிய பின் கோவிலுக்குக் கிளம்பினேன்.

அந்த நேரத்தில் கோவிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மூலவரைத் தரிசித்து விட்டுப் பிரகாரம் சுற்றி வந்தபோது, ஒரு சிறிய சன்னதி கண்ணில் பட்டது. சன்னதியின் பெயர் 'நம்மாழ்வார்' என்று மங்கிய வெளிச்சத்தில் படித்ததும் ஒரு கணம் என்னை அறியாமல் உடல் சிலிர்த்தது.

'திருவாய்மொழி' கொஞ்சம் படித்ததால் நம்மாழ்வாரிடம் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த நான், அநேகமாக யாருமே கண்டு கொள்ளாத அந்தச் சன்னதிக்குள் நுழைந்தேன். 

சன்னதி வாசலில், உள்ளே இருந்த விக்கிரகத்தை விட மங்கலாகத் தோன்றிய ஒரு உருவம், உள்ளே வருபவர்களுக்குச் சடாரி வைக்கத் தயாரான நிலையில் அமர்ந்திருந்தது.

குனிந்து தலையில் சடாரி வாங்கிக்கொண்ட பின், நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பொறி தட்டியது. பல வருடங்களுக்கு முன் என் அப்பாவுடன் இந்தக் கோவிலுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. பள்ளி ஆசிரியராக இருந்த என் அப்பாவின் பழைய மாணவர் அவர்.

"சுவாமிகள் பெயர் ரங்கநாதன்தானே?" என்றேன்.

"ஆமாம். தேவரீர் யாரோ?" என்றார் அவர், கண்களை இடுக்கிக்கொண்டு.

"நான் உங்கள் பள்ளி ஆசிரியர் வரதராஜனின் பையன். பல வருடங்களுக்கு முன்பு என் அப்பாவுடன் இங்கே வந்தபோது உங்களைப் பார்த்திருக்கிறேன்" என்றேன் நான்.

இதைக் கேட்டதும் அவர் முகத்தில் பெரிய பூரிப்பு. "வரது சாரின் பையனா நீங்கள்? சார் எப்படி இருக்கிறார்?" என்றார்.

"அப்பா காலம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகி விட்டன" என்றேன்.

"யாரோ சொன்னார்கள். நிச்சயமாகத் தெரியாததால்தான் கேட்டேன். ரொம்ப நல்ல மனுஷன்" என்றவர், உடனே பேச்சை மாற்றி, "எங்கே தங்கி இருக்கிறீர்கள்?" என்றார்.

சொன்னேன்.

"ஓ! அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்தான். ஆனால், நீங்கள் நம் அகத்திலேயே சாப்பிடலாமே!" என்றார் அவர். இதை அவர் உபசாரத்துக்காகச் சொல்லவில்லை, உண்மையாகத்தான் சொன்னார் என்று தோன்றியது.

"இல்லை. அங்கே எனக்காகச் சாப்பாடு தயார் செய்து வைத்திருப்பார்கள்"

அதற்குப் பிறகு வெகுநேரம் என் அப்பாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அவர். பள்ளிக்கூட நாட்கள், என் அப்பா அவரிடம் அன்பு காட்டியது, அடித்தது என்று பல விஷயங்களையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். பள்ளிக்கூட நாட்களுக்கு ஒரு நினைவுப் பயணம் போய் எல்லாவற்றையும் மீண்டும் அனுபவித்து உணர்ந்தது போல் பேசினார்.

பிறகு என்னைப் பற்றியும், நான் கோவிலுக்கு வந்தது பற்றியும் கேட்டறிந்தார்.

"அங்கப்பிரதட்சிணமா? காலையில் 5 மணிக்கு வந்து திருக்குளத்தில் நீராடி விட்டு அங்கப்பிரதட்சிணம் செய்தபிறகு நேரே சன்னதிக்கு வரலாம். அதிகாலையில் விஸ்வரூப தரிசனம். கூட்டம் இருக்கும். ஆனால் அங்கப் பிரதட்சிணம் செய்பவர்களுக்கு வரிசை கிடையாது. பெருமாளை தரிசிக்க அவர்களுக்குத்தான் முன்னுரிமை" என்றார் அவர்.

நேரமாகி விட்டதால் அவரிடம் விடை பெற்றேன். "ரொம்ப சந்தோஷம்" என்று இரு கைகளையும் மேலே தூக்கி வணங்கினார். அவர் சற்றே அதிகப்படியான மரியாதை காட்டியதாக எனக்குத் தோன்றியது.

நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்ததும், "ஏன் இவ்வளவு நேரம்? இந்த நேரத்தில் அவ்வளவாகக் கூட்டம் கூட இருந்திருக்காதே?" என்றார் .வீட்டுக்காரர். 

ரங்கநாதனைச் சந்தித்துப் பேசியது பற்றிச் சொன்னேன்.

"அவருக்குப் பணம் ஏதாவது கொடுத்தீர்களா?" என்றார் வீட்டுக்காரர்.

"பணமா, எதற்கு?" என்றேன் புரியாமல்.

"அவரைப் போன்றவர்களுக்குக் கோவிலில் இருந்து என்ன வருமானம் வந்து விடப் போகிறது? நீங்கள்தான் பார்த்திருப்பீர்களே - அவர் இருக்கிற சன்னதிக்குப் பல பேர் வரக் கூட மாட்டார்கள். உங்களைப் போன்றவர்கள் கொடுப்பதை வைத்துத்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது!"

"என் அப்பாவுக்குத் தெரிந்தவர் என்ற முறையில்தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை!"

"நீங்கள் ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்திருந்தால் அவர் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்."

"நாளைக்குப் பார்த்துக் கொடுத்து விடுகிறேன்" என்றேன் நான். 

அவர் தலைக்கு மேல் கைகளைத் தூக்கி என்னை வணங்கிய காட்சி என் நினைவுக்கு வந்தது. ஏமாற்றத்தாலும், விரக்தியினாலும்தான் அப்படிச் செய்தாரா?

மறுநாள் காலை அங்கப் பிரதட்சிணம் முடித்துப் பெருமாள் சன்னதிக்கு அருகே போனபோது ரங்கநாதன் அங்கே நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன். அவர் முகத்தில் சலனம் இல்லை. திடீரென்று என்னப் பார்த்து உரத்த குரலில், "கொஞ்சம் பின்னால் போங்கள். இவ்வளவு பேர் வரிசையில் நிற்பது தெரியவில்லையா?" என்றார் சற்றுக் கடுமையாக.

"அங்கப் பிரதட்சிணம் செய்தவர்கள் நேராகப் போகலாம்" என்று சொன்னார்களே?" என்றேன். 'சொன்னீர்களே' என்று கூடச் சொல்லியிருக்கலாம்! எனக்கு முன்னே, சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்ததன் அடையாளமான மண் படிந்த வேட்டியுடன் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்

அவர் முகம் கடுகடுத்தது. "அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டால் நேரே சொர்க்க வாசலுக்கே போகலாமே! இங்கே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்கு முன்னால் இவ்வளவு பேர் அர்ச்சனைத் தட்டுடன் நிற்பது தெரியவில்லை? நீங்கள் எல்லாம் படித்தவர்கள்!" என்று பெரும் குரலெடுத்துக் கூவினார்.

முன்னே நின்றிருந்த அர்ச்சகர்களும், வரிசையில் நின்றவர்களும் சற்றே ஆச்சரியத்துடன் எங்களைப் பார்க்க, "நீங்கள் எல்லாம் படித்தவர்கள்" என்று அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று நான் யோசிக்கத் துவங்கினேன்.

(Written in January, 2010)