Friday, June 10, 2016

15. நேர்முகத் தேர்வு - மறைமுக விடை


எவ்வளவு யோசித்தாலும் ராமானுஜத்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சக்திவேலா, சரவணனா?

சக்திவேல், சரவணன் இருவரும் ராமானுஜத்தின் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கான நேர்முகத்தேர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்தவர்கள்.

ராமானுஜம் இருவரையும் இரண்டு முறை இண்டர்வியூ செய்து விட்டார். மதிப்பெண் போடுவதென்றால், ஒருவரை விட இன்னொருவருக்கு ஒரு மதிப்பெண் கூட அதிகமாகப் போட முடியாது,

இருவரும் இருவிதப் பின்னணியைக் கொண்டவர்கள்.

சக்திவேல் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தவன். அனுபவம் சில வருடங்களே என்றாலும் குறுகிய காலத்திலேயே தன்  திறமையைச் சிறப்பாக வெளிக்காட்டியவன்.

சரவணன் விஞ்ஞானப் பட்டதாரி. எம்.பி.ஏ  இல்லை. ஆயினும் அவனது இயல்பான திறமையும், விரிவான அனுபவமும் பல எம்.பி.ஏக்களைப் பின்னுக்குத் தள்ளி அவனை இறுதித் தேர்வுக்குக் கொண்டு வந்து விட்டது.

இன்று எப்படியும் முடிவு செய்து விடலாம்  என்று நினைத்து இருவரையும் அழைத்துத் தனித் தனியே பேசிப் பார்த்தார்.

சக்திவேலிடம் பேசியபோது, 'இவன்தான் நமக்கு ஏற்றவன். இவனையே தேர்ந்தெடுத்து விடலாம்' என்று நினைத்தார். சரவணனிடம் பேசாமலேயே அவனைத் திருப்பி அனுப்பி விடலாம் என்று கூட நினைத்தார். ஆயினும் அழைத்து விட்டுப் பேசாமல் அனுப்பினால் முறையாக இருக்காது என்று நினைத்து அவனிடமும் பேசிப் பார்த்தார்.

சரவணனிடம் பேசியபோது இவ்வளவு அருமையான ஒரு நபரைத் தவற விட நினைத்தோமே என்று தோன்றியது.

இருவரையும் இண்டர்வியூ செய்தபிறகு இருவரையும் அரைமணி நேரம் காத்திருக்கச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து, பெண் பார்த்து விட்டுப் போகும் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது போல் தொலைபேசி மூலம் தகவல் சொல்வதாகத் தன உதவியாளர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி விட்டார்.

இருவருக்கும் ஏமாற்றம் - எரிச்சலும் கூட. 'என் இந்தக் கிழவன் இப்படி வதைக்கிறான்?' என்று சலித்துக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் போய்ச் சில நிமிடங்கள் ஆகியிருக்கும். நினைவு அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது.

இருப்புக் கொள்ளாமல் ஜன்னலருகே போய்த் திரையை விலக்கி வெளியே பார்த்தார். கிழே தெரிந்த சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து அதிகமாக இருந்தது. சாலையைக் கடப்பதற்காகப பலர் காத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் சக்திவேலும், சரவணனும் கூட இருந்தனர்.

'சட்! மனதைத் திருப்பலாம் என்று வெளியே பார்த்தால், இங்கேயும் இந்த இருவருமா?' என்று சலித்துக்கொண்டே திரும்ப நினைத்தவர், எதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவராக அங்கேயே நின்றார்.

ஒரு சிலர் சாலையைக் கடக்க முயன்று போக்குவரத்தின் வேகம் கண்டு பின் வாங்கினர். அது பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்றாலும், வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு வழி விடாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சாலையைக் கடக்க முயலும் பாதசாரிகளை அச்சுறுத்துவதற்காகவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

சட்டென்று ஒரு நபர் முன்னால் அடி எடுத்து வைத்தார். மற்றவர்களைத் தன்னைப் பின் தொடருமாறு சைகை காட்டினார். வாகனங்களைக் கை காட்டி நிறுத்தும்படி சைகை காட்டியபடியே தயக்கமின்றி நடந்தார்.

மற்றவர்கள் அவரைப் பின் தொடர, வாகனங்கள்  வேகத்தைக் குறைத்தும், சடன் பிரேக் போட்டும் நின்றன. பாதசாரிகள் நிதானமாகச் சாலையைக் கடந்தனர்.

ராமானுஜத்துக்குத் தெளிவு பிறந்து விட்டது. ஒரு பிரச்னை எழும்போது, முனைப்புடனும், துணிவுடனும் செயல் பட்டு, மற்றவர்களை வழி நடத்தித் தன் தலைமைப் பண்பை வெளிப்படுத்திய சரவணன்தான் அவருடைய தேர்வு!

No comments:

Post a Comment