Monday, May 8, 2017

22. சரளா சம்மதிப்பாளா?


முதன் முதலில் சரளாவைப் பார்த்தபோதே ரகுவுக்கு அந்த எண்ணம் வந்து விட்டது.

ஒரு பார்ட்டியில்தான் முதலில் அவளைப் பார்த்தான் ரகு. அவன் நண்பன் பாஸ்கர் அவளை அறிமுகப்படுத்தியபோது, இந்த பாஸ்கருக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. உடனேயே கமலாவின் நினைவு வந்து எரிச்சல் ஊட்டியது.

சரளா ஒன்றும் பெரிய அழகி இல்லை. ஏன், அழகு என்று பார்த்தால், சரளாவை விடக் கமலாவுக்கு ஐந்து மதிப்பெண்கள் அதிகமாகவே கொடுக்கலாம்.

ஆனால், அந்தச் சிரித்த முகம், உற்சாகம், இனிமையாகப் பழகும் தன்மை, அவள் உதட்டில் கொஞ்சும் ஆங்கிலம் இவை எல்லாம் சேர்ந்து அவளுக்கு அளிக்கும் கவர்ச்சி இருக்கிறதே......ம்...கமலாவும் இருக்கிறாளே! கடுகடு முகம், கரகரத்த குரல், பல  நாட்கள் தூக்கம் இல்லாதது போல் சோர்வைச் சுமந்து நிற்கும் கண்கள், தெளிவில்லாத குரல், உற்சாகம் இல்லாத தோற்றம்..

கமலாவை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருந்தது. என்னதான் அவளைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் உணரும் அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தாலும், அவளுக்குக் கிடைக்கப் போகும் அதிர்ச்சி, மறுபுறம் நண்பன் பாஸ்கருக்குத் தான் செய்யப் போகும் துரோகம், இவை இரண்டுக்கும் இடையே சரளா படிந்து வருவாளா என்ற சந்தேகம் ஆகியவற்றுக்கிடையே அவன் மனம் அல்லாடியது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை இருந்தது.

'பாஸ்கர் ஏதோ பிஸினஸ் பண்ணுவதாக பாவனை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறான். நானோ பிஸினஸில் நன்கு காலூன்றி நாலு பேர் மதிக்க வாழ்பவன். சரளா புத்திசாலி. பிராக்டிகலாகச் சிந்திப்பவள். நிச்சயம் ஒரு நல்ல முடிவு எடுப்பாள்'

'கமலாதான் பாவம். அவளுக்கு வேறு வழி கூட இல்லை. என்ன செய்வது. அவள் தலைவிதி. அவளுடைய அழகுக்கு, அவளுக்கு மட்டும் சரளாவின் துடிப்பிலும், புத்திசாலித்தனத்திலும் பாதி இருந்திருந்தால் கூட அவளை மகாராணி மாதிரி வைத்துக் கொண்டிருப்பேனே!'

மதிய உணவுக்கு பாஸ்கர் வீட்டுக்குப் போய் விடுவான் என்று தெரிந்து, அந்த நேரத்தில் பாஸ்கரின் அலுவலகத்துக்குப் போனான். சரளாவைப் பார்த்து சில நிமிடங்கள் பேசியதில் அவள் சம்மதம் தெரிவித்து விட்டாள். அவளைப் பற்றிய ரகுவின் கணிப்பு பொய்க்கவில்லை.

இனிமேல் சரளாதான் அவன் ஆஃபிஸ் ரிசப்ஷனிஸ்ட். கமலாவுக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட வேண்டியதுதான்!
(1990ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)

No comments:

Post a Comment